சத்குரு ஜக்கிவாசுதேவ்
ஒரு விஷயத்தை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கவேண்டுமே தவிர, முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்." சத்குரு ஜக்கிவாசுதேவ் தமிழக கிராமப்புறங்களை மலர்த்துவதற்காக கொண்டு வந்த கிராமப் புத்துணர்வு திட்டத்தை முதலில் அறிமுகப் படுத்தும் போது கூறிய வாசகங்கள் இவை.
கிட்டதட்ட இருபதாண்டுகளுக்கு முன்னால் அவர் கோவை வந்தபோது அவருடைய வழிகாட்டுதலில் தங்கள் உள்நிலை வாழ்வை உன்னதப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழைக்கப்போகிறோம் என்பது தெரியாது.
தன்னுடைய சீடர்களை தன்னார்வத் தொண்டர்கள் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்ளும் சத்குரு, அவர்களால்தான் தன்னுடைய திட்டங்கள் சிறப்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் கிராமப் புத்துணர்வு திட்டம் துவங்கி, கிராம மக்களுடைய உள்நிலை மற்றும் உடல்நிலையை சீராக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, சத்குரு, தன்னார்வத் தொண்டர்களின் அயராத உழைப்பிற்கு முன்னால் மிகப்பெரிய சவாலாக இருக்க வல்ல பசுமைக்கரங்கள் திட்டத்தை அறிவித்தார்.
தியானலிங்கக் கோவிலை உருவாக்கியபோது அவர் அமைத்த வனஸ்ரீ என்ற தங்க இலைகொண்ட கல்மரம் அவர் மரங்களின் மீது கொண்டிருந்த நேசத்தை உணர்த்தியது.
சத்குரு சிறுவயதில் இருந்தே இயற்கையின் இனிய நண்பராகவே திகழ்ந்திருக்கிறார். அவருடைய இளமைப் பருவ மோட்டார்பைக் பயணங்கள் காடு களிலும் மலைகளிலும் இருந்தன. சாமுண்டி மலையின் மரங்களின் உச்சியில் அமர்ந்து நகரைப் பார்க்கிற பழக்கமும் அவருக்கிருந்தது.
பதினொரு வயதில் தன்னை தோற்கடித்த எண்பது வயதான மலாடிஹள்ளி சுவாமிகளிடம் யோகா சனங்கள் கற்றுக்கொண்டதைப்போல தான் மரங்களை நேசித்து வளர்ப்பதற்கும் காரணமான ஒருவரைப் பற்றி அவர் தன்னுடைய உரைகளில் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. தன்னுடைய மனைவி இறந்தபின் வெளி உலகத்தைப் பார்த்த ஒருவர் தான் வசித்த இடத்திற்கு அருகிலிருந்த பசுமையான மலை தன்னுடைய முதிய காலத்தில் மரங்களற்று காய்ந்து கிடப்பதைக் கண்டு தன் வாழ்வும் இது போலாகி விட்டதோ என்று எண்ணினார். பிறகு தன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் உள்ளதென கருதி அந்த மலையில் மரங்கள் வளர்த்து பசுமையான மலையாக அதை ஆக்கினார் என்பார் சத்குரு.
கிராமப் புத்துணர்வுத் திட்டத்தின் இன்னோர் அங்கமாக பசுமைக்கரங்கள் வேகவேகமான தமிழகத்தில் தன் விதைகளை நட்டது. இந்தப் பணியில் -ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் இந்த வாய்ப்பை தங்களுக்கு அளித்த பெரும் பேறாய் கருதி உழைத்தனர்.
தமிழக கிராமங்களில் பாடப்படும், ஒரு குடம் தண்ணி ஊத்தி என்ற பாடல் ஈஷா இசைக்குழுவினரால் பாடப்பட்டு, பசுமைக்கரங்களின் பாடலாக ஒலித்தது. அந்தப்பாடலில் தங்கள் இளமைக் காலத்து கிராமங்களை கண்முன் நிறுத்துவதை மக்கள் உணர்ந்தார்கள்.
11.4 கோடி மரங்கன்றுகள் தமிழகத்தில் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி பசுமைக்கரங்கள் பயணம் மேற்கொள்கிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழகத்தின் வனப்பகுதியை தற்போதைய 17.5 சதவிகிதத்திலிருந்து, 33 சதவிகிதமாக உயர்த்த இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 8,52,587 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.
2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள 21 மாவட்டங்களில் 77 நர்சரிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நர்சரியும் ஐந்தாயிரம் முதல் முப்பதாயிரம் மரக் கன்றுகளைத் தரும்படி உருவாக்கப் பட்டுள்ளன.
பசுமைக்கரங்கள் ஆரம்பித்த 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 71 லட்சம் மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப் பட்டுள்ளன. பசுமைக்கரங்கள் சார்பாக வனப்பாதுகாப்பு முகாம்களும் நடத்தப் படுகின்றன.
இப்படி பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழகத்தை பசுமையாக்க பசுமைக்கரங்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
திருப்பூர், கரூர் போன்ற தொழில் நகரங்களில் பசுமைக்கரங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளோடு இணைந்து அந்தந்த ஊர்களின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு மரம் நடுவதோடு மட்டு மல்லாமல், அதைப் பராமரிக்கவும் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி வருகிறது.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ஆன்மிகமும் அறிவியலும் கைகோர்க்க வேண்டியுள்ளது. பசுமைக்கரங்கள் திட்டம் அனைவரையும் இணைக்கும் பந்தமாக அமைகிறது என்று கூறியிருப்பதின் மூலம் அந்தத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த உன்னதம் நமக்கு விளங்கும்.
பொருளாதாரம் பற்றி உலக நாடு களின் மாநாட்டில் உரை நிகழ்த்துபவர், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆன்மீக வழிகாட்டியாய் விளங்குபவர், பசுமைக் கரங்கள் மற்றும் கிராமப் புத்துணர்வு திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மக்களால் மரம் வைக்கும் சாமி என்று போற்றப்படுகிறார்.
2008ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மிக உயர்ந்த சுற்றுச் சூழல் விருதான இந்திரா காந்தி விருதை கடந்த ஆண்டு பசுமைக்கரங்கள் அமைப்பிற்காக சத்குரு பெற்றார்.
ஒரு பிரம்மாண்ட அளவிலான மரம் நடும் திட்டம் மற்றும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலமாக பசுமைப்பரப்புகள் உருவாக்கும் செயல்முறைகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இன்றும் இயங்கி வருகிறது.
கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும் தமிழக மக்கள்மீது மதிப்பும் தன்னுடைய எல்லையில்லா அன்பையும் பொழிபவர் சத்குரு ஜக்கிவாசுதேவ். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற உதவிய தமிழ் மக்கள் தன்னுடைய நன்றிக்கும் உரியவர்கள் என்பதை அவருடைய இந்தக் கவிதை வரிகள் உணர்த்துகின்றன.
தமிழ் மக்கள்
பாதச்சுவடுகள், புழுதி, வெயில்,
சாப்பிடக்கிடைப்பதோ, சாம்பார் இட்லி!
நகரங்களிலும் ஆலயங்களிலும் இங்கே
நெரிசலில் மனிதர்கள் வியர்வையில் கரைவர்!
தேடிச் சாப்பிடும் சட்னிகள் போலவே
கோடை வெயிலின் அடர்த்தி பலவிதம்!
வியர்வையில், மூச்சில் வெளிப்படும் நெடியோ
உங்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தலாம்.
இவர் தம் இதயங்களின் இனிய நறுமணம்
இங்கே உங்களை இழுத்து வந்திடும்.
மேனி கறுத்த இந்த மகிழ்வான மனிதர்கள்
வசீகரமாய் இல்லாமல் இருக்கலாம்.
இறைவனாம் ராமனும் வேண்டி வந்தது
இந்த மனிதர்களின் உதவியைத் தான்.
அப்பாவியான இந்தப் பரவச மனிதர்கள்
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்கள்
அவர்களின் எல்லையில்லா நம்பிக்கையும்
ஆன்மீகத்தேடலும் கண்டு
வேறு நினைவின்றி என் குருவின் கனவாம்
தியானலிங்கத்தை உண்மையாக்கினேன்
இவர்கள் மத்தியில்!
No comments:
Post a Comment