Friday, April 6, 2012



  ரளா, இயற்கையின் அன்னை மடியாய், தண்ணீர் தேசமாய் பரந்து விரிந்திருக்கிற பிரதேசம். நண்பர்களோடு நாங்கள் சென்றபோது அந்தச்சுற்றுலா இவ்வளவு இனிமையாக இருக்குமென்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. பயண ஏற்பாடுகளை ட்ராவல்மேட் நிறுவனம் கவனித்துக் கொள்ள திருப்பூரிலிருந்து எட்டு பேருந்துகளில் கிளம்பினோம். மொத்தம் மூன்று நாட்கள் சுற்றுலா. முதல்நாள் ஆலப்புழாவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த எங்களுக்கு ஆனந்த வரவேற்பு காத்திருந்தது. பத்திற்கும் மேற்பட்ட செண்டை வாத்தியக் கலைஞர்கள் தங்கள் தாளத்தால் எங்கள் அனைவரையும் வரவேற்றனர். அறைக்கு வந்து குளித்து காலை உணவிற்கு கீழே வந்தபோதும் கேரளக் கலைஞர்களின் செண்டை மேளம் உள்ளத்தை கவர்ந்தது. கேரள உணவு வகைகளும், தமிழக உணவு வகைகளும் பரிமாறப்பட்ட காலை உணவை முடித்து விட்டு ஹோட்டலில் இருந்து புறப்பட்டோம்.

ஹோட்டலிருந்து கிளம்பிய பேருந்து சென்று சேர்ந்தது, நீர் விளையாட்டில் புகழ் பெற்ற விளையாட்டுப்பூங்காவான வீகா லேண்டிற்கு. நண்பர்கள் உற்சாக மானார்கள். குழந்தைகள் போல ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்று களிப்படைந்தார்கள்.

மதிய வேளை கேரள வகை உணவு அங்கேயே அருந்தினோம். தொடர்ந்து நீர் விளையாட்டுக்களில் ஆடிக் களைத்து திரும்பவும் ஹோட்டலுக்கு வந்த போது, பாதி இரவு கடந்திருந்தது.

அடுத்த நாள் காலை சற்று முன்னதாகவே தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருந்தார்கள் சுற்றுலா நிறுவனத்தினர். அன்று அவர்கள் அழைத்துப்போனது ஆலப்புழா படகுத் துறைக்கு. ஒவ்வொரு படகும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரும் மாளிகைகள். அழகான அறைகள், குளியல்  மற்றும் கழிப்பறை வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. பயணிகள் எண்ணிக்கைக்குத் தக்கபடி படகுகள் விதவிதமாக காத்திருந்தன.

எங்கள் குழுவினரின் எண்ணிக்கை பதினைந்து. எனவே அதற்கேற்றபடி ஒரு பெரிய படகு இல்லம் ஒன்றில் நாங்கள் ஏறினோம். எல்லோரும் ஏறி அமர்ந்தபிறகு மெல்ல நகர்ந்தது அந்த படகு வடிவிலான  சொர்க்கம்.
ஆலப்புழாவில் உள்ள அந்த ஏரி கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது என்றார் படகோட்டி. முதலில் கடலில்தான் பயணிக்கப் போகிறோம் எண்ணியிருந்தோம். ஆனால் அது ஏரி என்று அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். படகு இல்லங்களின் வாடகை அதன் அளவிற்கேற்றாற் போல் மாறுபடுகின்றது. முற்பகல் தொடங்கி, அடுத்த நாள் காலைவரை படகு இல்லத்திலேயே தங்கும்படி எங்களுக்கு அந்தப்படகு இல்லம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஏரியின் உட்புறம் செல்லச் செல்ல அதன் அகலம் தெரிந்தது. மலையாளிகள் இயற்கையை பராமரிக்கும் அற்புதம் அங்கே புரிந்தது. அந்த ஏரியில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. கோட்டயம் தொடங்கி ஆலப்புழா வரைக்கும் செல்லும் பயணிகள் படகொன்று எங்கள் படகை கடந்து சென்றது. 
எதிரிலும் பக்கத்திலும் வந்து கொண்டிருந்த பல படகுகளில் உள்நாட்டினர், வெளிநாட்டினர் என்று பல விதமான மக்கள் அந்த இயற்கைச்சூழலை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தனர்.

பயணம் தொடங்கி நாங்கள் எங்கள் உடைமைகளை அவரவர் அறைகளில் வைத்துவிட்டு படகிலிருந்த பால்கனியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அருமையானதொரு எலுமிச்சை பழச்சாறு கொடுத்தார்கள் படகுப் பணியாளர்கள். நாங்கள் சென்ற படகில் படகோட்ட ஒருவர், சமையல் வேலைக்கு இருவர், படகைப் பராமரிக்க ஒருவர் என நான்கு பணியாளர்கள் இருந்தனர்.

மதியம் மீனுடன் கேரளச் சாப்பாடு உண்டோம். படகுகளில் டிவி பெட்டிகள் டிஷ் ஆன்ட்டெனா சகிதம் இருந்தன. இயற்கையை ரசித்துப்பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு வழக்கமாய்ப் பார்க்கிற டிவி என்று நண்பர்களோடு உரையாடிக் கொண்டும், எதிரில் வந்த படகிலிருந்த பயணிகளைப் பார்த்து கையசைத்து எங்கள் உற்சாகத்தை பகிர்ந்தபடியே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். இரவில் தங்கும் படகுகள் ஏரியின் நடுவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த கரைகளில் ஓரங் கட்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.

பேருந்துப்பயணத்தில் இடையே உணவு மற்றும் தேநீருக்கு நின்று போவதைப் போல அந்த ஏரியில் அங்கங்கே கடைகள் இருந்தன. மீன்கள், பேக்கரிப் பொருட்கள், இளநீர் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களும் இருந்தன.

நாங்கள் வந்த படகும் சிறிதுநேரம் இது போன்ற கடைகள் நிறைந்த கரையொன்றில் ஒதுங்கி நின்று இளைப் பாறியது. எங்கள் படகைப்போலவே பல படகுகளும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தன. நண்பர்கள் குளிர்பானங்கள், மீன்கள் போன்றவற்றை வாங்கினார்கள். அங்கிருந்து கிளம்பினோம். சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, மெல்ல மெல்ல இருள் கவிழத் தொடங்கிய போது, ஓர் இடத்தில் எங்கள் படகு, கரை ஒதுங்கியது. இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறையில் தங்கினோம். காலை உணவு முடிந்ததும் படகு ஆலப்புழா படகு இல்லத்தை நோக்கி விரைந்தது.

அடுத்து நாங்கள் சென்றது ஆலப்புழா கடற்கரை. அங்கிருந்து கொச்சின் துறைமுகம். அங்கே மீண்டும் படகில் வலம் வந்தோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்த பிறகு, இரவு  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பார்வையாளர் களும் பங்கேற்கும் படியான நிகழ்ச்சிகளும் நடந்தன. நண்பர்கள் உற்சாகமாக அவற்றில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடனக்கலைஞர்களுடன் நண்பர்கள் இணைந்து நடனமாடினர். அந்த உற்சாகத்துடன் இரவு உணவை முடித்துக்கொண்டு இனிமை யான இந்த சுற்றுலாவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு அவரவர்க்கான பேருந்தில் திருப்பூர் நோக்கி புறப்பட்டோம்.   கேரளாவும் அதன் இயற்கை சார்ந்த வாழ்வும் என்றைக்கும் மறக்காத நினைவு களை அனைவருக்கும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சத்குரு ஜக்கிவாசுதேவ்


சத்குரு ஜக்கிவாசுதேவ்  

ஒரு விஷயத்தை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கவேண்டுமே தவிர, முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்." சத்குரு ஜக்கிவாசுதேவ்  தமிழக கிராமப்புறங்களை மலர்த்துவதற்காக கொண்டு வந்த  கிராமப் புத்துணர்வு திட்டத்தை முதலில் அறிமுகப் படுத்தும் போது கூறிய வாசகங்கள் இவை.

கிட்டதட்ட இருபதாண்டுகளுக்கு முன்னால் அவர் கோவை வந்தபோது அவருடைய வழிகாட்டுதலில் தங்கள் உள்நிலை வாழ்வை உன்னதப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழைக்கப்போகிறோம் என்பது தெரியாது. 

தன்னுடைய சீடர்களை தன்னார்வத் தொண்டர்கள் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்ளும் சத்குரு, அவர்களால்தான் தன்னுடைய திட்டங்கள் சிறப்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது  என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

தமிழகத்தில் கிராமப் புத்துணர்வு திட்டம் துவங்கி, கிராம மக்களுடைய உள்நிலை மற்றும் உடல்நிலையை சீராக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, சத்குரு, தன்னார்வத் தொண்டர்களின் அயராத உழைப்பிற்கு முன்னால் மிகப்பெரிய சவாலாக இருக்க வல்ல பசுமைக்கரங்கள் திட்டத்தை அறிவித்தார்.

தியானலிங்கக் கோவிலை உருவாக்கியபோது அவர் அமைத்த வனஸ்ரீ என்ற தங்க இலைகொண்ட கல்மரம் அவர் மரங்களின் மீது கொண்டிருந்த நேசத்தை உணர்த்தியது.  

சத்குரு சிறுவயதில் இருந்தே இயற்கையின் இனிய நண்பராகவே திகழ்ந்திருக்கிறார். அவருடைய இளமைப் பருவ மோட்டார்பைக் பயணங்கள் காடு களிலும் மலைகளிலும் இருந்தன. சாமுண்டி மலையின் மரங்களின் உச்சியில் அமர்ந்து நகரைப் பார்க்கிற பழக்கமும் அவருக்கிருந்தது.

பதினொரு வயதில் தன்னை தோற்கடித்த எண்பது வயதான மலாடிஹள்ளி சுவாமிகளிடம் யோகா சனங்கள் கற்றுக்கொண்டதைப்போல தான் மரங்களை நேசித்து வளர்ப்பதற்கும் காரணமான ஒருவரைப் பற்றி அவர் தன்னுடைய உரைகளில் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. தன்னுடைய மனைவி இறந்தபின் வெளி உலகத்தைப் பார்த்த ஒருவர் தான் வசித்த இடத்திற்கு அருகிலிருந்த பசுமையான மலை தன்னுடைய முதிய காலத்தில் மரங்களற்று காய்ந்து கிடப்பதைக் கண்டு தன் வாழ்வும் இது போலாகி விட்டதோ என்று எண்ணினார். பிறகு தன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் உள்ளதென கருதி அந்த மலையில் மரங்கள் வளர்த்து பசுமையான மலையாக அதை ஆக்கினார் என்பார் சத்குரு.

கிராமப் புத்துணர்வுத் திட்டத்தின் இன்னோர் அங்கமாக பசுமைக்கரங்கள் வேகவேகமான தமிழகத்தில் தன் விதைகளை நட்டது. இந்தப் பணியில் -ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் இந்த வாய்ப்பை தங்களுக்கு அளித்த பெரும் பேறாய் கருதி உழைத்தனர்.

தமிழக கிராமங்களில் பாடப்படும், ஒரு குடம் தண்ணி ஊத்தி என்ற பாடல் ஈஷா இசைக்குழுவினரால் பாடப்பட்டு, பசுமைக்கரங்களின் பாடலாக ஒலித்தது. அந்தப்பாடலில் தங்கள் இளமைக் காலத்து கிராமங்களை கண்முன் நிறுத்துவதை மக்கள் உணர்ந்தார்கள். 

11.4 கோடி மரங்கன்றுகள் தமிழகத்தில் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி பசுமைக்கரங்கள் பயணம் மேற்கொள்கிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழகத்தின் வனப்பகுதியை தற்போதைய 17.5 சதவிகிதத்திலிருந்து, 33 சதவிகிதமாக உயர்த்த இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.

2006ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 8,52,587 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.

2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள 21 மாவட்டங்களில் 77 நர்சரிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நர்சரியும் ஐந்தாயிரம் முதல் முப்பதாயிரம் மரக் கன்றுகளைத் தரும்படி உருவாக்கப் பட்டுள்ளன.

பசுமைக்கரங்கள் ஆரம்பித்த 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 71 லட்சம் மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப் பட்டுள்ளன. பசுமைக்கரங்கள் சார்பாக வனப்பாதுகாப்பு முகாம்களும் நடத்தப் படுகின்றன.  

இப்படி பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழகத்தை பசுமையாக்க பசுமைக்கரங்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

திருப்பூர், கரூர் போன்ற தொழில் நகரங்களில் பசுமைக்கரங்கள்,  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளோடு இணைந்து அந்தந்த ஊர்களின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு மரம் நடுவதோடு மட்டு மல்லாமல், அதைப் பராமரிக்கவும் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி வருகிறது.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ஆன்மிகமும் அறிவியலும் கைகோர்க்க வேண்டியுள்ளது. பசுமைக்கரங்கள் திட்டம் அனைவரையும் இணைக்கும் பந்தமாக அமைகிறது என்று கூறியிருப்பதின்  மூலம் அந்தத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த உன்னதம் நமக்கு விளங்கும். 

பொருளாதாரம் பற்றி உலக நாடு களின் மாநாட்டில் உரை நிகழ்த்துபவர், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆன்மீக வழிகாட்டியாய் விளங்குபவர், பசுமைக் கரங்கள் மற்றும் கிராமப் புத்துணர்வு  திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மக்களால் மரம் வைக்கும் சாமி என்று போற்றப்படுகிறார். 

2008ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மிக உயர்ந்த சுற்றுச் சூழல் விருதான இந்திரா காந்தி விருதை  கடந்த ஆண்டு பசுமைக்கரங்கள் அமைப்பிற்காக சத்குரு பெற்றார்.

ஒரு பிரம்மாண்ட அளவிலான மரம் நடும் திட்டம் மற்றும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலமாக பசுமைப்பரப்புகள் உருவாக்கும் செயல்முறைகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இன்றும் இயங்கி வருகிறது.  

கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும் தமிழக மக்கள்மீது மதிப்பும் தன்னுடைய எல்லையில்லா அன்பையும் பொழிபவர் சத்குரு ஜக்கிவாசுதேவ். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற உதவிய தமிழ் மக்கள் தன்னுடைய நன்றிக்கும் உரியவர்கள் என்பதை அவருடைய இந்தக்  கவிதை வரிகள் உணர்த்துகின்றன. 

தமிழ் மக்கள்

பாதச்சுவடுகள், புழுதி, வெயில்,
சாப்பிடக்கிடைப்பதோ, சாம்பார் இட்லி!

நகரங்களிலும் ஆலயங்களிலும் இங்கே
நெரிசலில் மனிதர்கள் வியர்வையில் கரைவர்!

தேடிச் சாப்பிடும் சட்னிகள் போலவே
கோடை வெயிலின் அடர்த்தி பலவிதம்!

வியர்வையில், மூச்சில் வெளிப்படும் நெடியோ
உங்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தலாம்.
இவர் தம் இதயங்களின் இனிய நறுமணம்
இங்கே உங்களை இழுத்து வந்திடும்.

மேனி கறுத்த இந்த மகிழ்வான மனிதர்கள் 
வசீகரமாய் இல்லாமல் இருக்கலாம்.
இறைவனாம் ராமனும் வேண்டி வந்தது
இந்த மனிதர்களின் உதவியைத் தான்.

அப்பாவியான இந்தப் பரவச மனிதர்கள் 
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்கள்
அவர்களின் எல்லையில்லா நம்பிக்கையும்
ஆன்மீகத்தேடலும் கண்டு
வேறு நினைவின்றி என் குருவின் கனவாம்
தியானலிங்கத்தை உண்மையாக்கினேன்
இவர்கள் மத்தியில்!

Saturday, January 15, 2011

நூல் அறிமுகம்

விலைவாசி உயர்வும், நாளுக்கு நாள் மாறிவரும் நாகரிகச் சூழலும் மனிதனை திணறச் செய்கின்றன. காலங்காலமாய் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நமது முன்னோர்கள்.
செல்லப் பிள்ளைகளுக்கு அம்மா சேமிக்கும் ரகசிய இடங்கள் தெரிந்திருக்கும்.
பெண்களின் சேமிப்பின் பலனை ஆண்களும் சிரமமான சூழ்நிலையில் அடைகிறார்கள்.
பெரியோர்கள் உங்கள் முதல் செலவு சேமிப்பாய் இருக்கட்டும் என்பார்கள்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிட்டதட்ட காணக்கிடைக்காத இந்நாளில், தனிக்குடித்தன வாழ்வில் கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தாலும் சேமிப்பின் அருமையை உணராததால் பல தம்பதிகள் தடுமாறுகிறார்கள். மேலைக்கலாசாரம் செலவுக்கலாசாரம். இந்தியா சேமிப்பு கலாசாரமுடையது. மேலைநாகரிகத்தின் தாக்கத்தால் உணவு வாழ்க்கை முறை மாறியது. சேமிப்பு கலாச்சாரமும்கூட.
வெளிநாட்டு வங்கியொன்றின் இந்திய உதவிப் பொது மேலாளராய் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழரான திரு. சேதுராமன் சாத்தப்பன் எழுதியிருக்கும், பணம் காய்க்கும் மரம் என்கிற நூல் நமக்கு சேமிப்பு முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விரிவாய் சொல்கிறது.உண்டியல் தொடங்கி பங்குச்சந்தை வரை ஒவ்வொரு தலைப்பிலும் நூலாசிரியரின் அனுபவம் பேசுகிறது.
நூலைப் படித்தால் சேமிக்காதவர்கள் உடனடியாக சேமிக்கத்தொடங்குவார்கள். சேமித்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிகம் சேமிக்கத் திட்டமிடுவார்கள். இப்படி படிக்கும் அனைவரையும் சேமிப்பிற்கு தயார் செய்வது அவருடைய எழுத்தின் வெற்றி.ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் நூலாசிரியர் தரும் குறிப்புகள் நமக்கு பொருளாதாரத்தை போதிக்கின்றன. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை சொல்கிறார்.
செலவுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாய் சொல்கிறார். வங்கியில் இருக்கும் தொகையை சிறப்பாய் பயன்படுத்த ஆசிரியர் தரும் யோசனை இது.

''உபரியாய் இருக்கும் பணத்தை சேமிப்புக்கணக்கில் போட்டு வைக்காதீர்கள். எத்தனை நாட்கள் உங்களுக்கு அந்தப் பணம் தேவையில்லையோ, அத்தனை நாட்களுக்கு வட்டி கிடைக்கும். சில மியூச்சுவல் பண்டுகள்கூட இதுபோன்ற லிக்யூட் போன்ற பண்டுகளை ஆரம்பித்துள்ளது. இவை சேமிப்பு அதிக வருமானம் தரும்.''

சேமிக்கவும் சேமித்த பணத்தை நல்லமுறையில் முதலீடு செய்யவும் சுலபமான வழிகாட்டும் பணம் காய்க்கும் மரம் நூலை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விலை: ரூ.60 கிடைக்குமிடம் : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001 போன்: 0422-- 2382614

Monday, February 22, 2010

தீபாங்கி பிள்ளைத் தமிழ்

தீபாங்கி பிள்ளைத் தமிழ் 1

இருளில்லை ஆனாலும்
கண் கூசும் வெளிச்சமில்லை
துயரில்லை ஆனாலும்
துள்ளுகின்ற இன்பமில்லை

தீபங்கள் ஒளிர்கின்ற திருநாளில்
தீமைகள் அழிகின்ற அரும்நாளில்
பாவங்கள் போக்க
ஏக்கங்கள் தீர்க்க
வந்தாள்-தீராத இன்பம்
தந்தாள்!